சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மாசி பெருவிழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா, தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனையடுத்து அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டம் கோவிலில் இருந்து தொடங்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்காளம்மா அங்காளம்மா என்று கோஷமிட்டுள்ளனர். இந்த தேரோட்டம் நடைபெறும் போது பக்தர்கள் நாணயங்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தேர்களின் வீசி நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அலகு குத்தியும், அம்மன் போல் வேடம் அணிந்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தியுள்ளனர்.
இந்த தேரோட்ட திருவிழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன், சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த விழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செய்திருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை சிறப்பாக தரிசனம் செய்துள்ளனர்.