நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் ஐந்து பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகின்றது.
மறைமுக தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கட்சிகளுக்கு இடையே பிரச்சனை நிலவி வருவதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் காலை முதல் உறுப்பினர் தேர்வு நடைபெற்று வந்தது. அப்போது மர்ம நபர்கள் 4 பேர் திடீரென அரிவாள் மற்றும் கட்டைகளுடன் அலுவலகத்தில் புகுந்து, டிஎஸ்பி வெங்கடேசனை வலது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
மேலும் அவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே டிஎஸ்பி வெங்கடேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவதில் ஈடுபட்டவர்களை தேடி வந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.