சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “வசந்தகுமாரிடமிருந்து கட்சி செலவுக்காக 10 ரூபாய் வாங்குவது என்பது கூட கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றதாகும். அவரை ஏதாவது ஒரு கூட்டத்தில் பங்கேற்க வைப்பது என்றால் நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவருடன் தொடர்ந்து பேசி சம்மதிக்க வைக்க வேண்டும்.
ஆனால் வசந்தகுமாரின் துணைவியார் கட்சி வளர்ச்சிக்காக பல வகைகளிலும் நிதி உதவி செய்கிறார். இந்த முறை ராகுல்காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தபோது 90 சதவிகித செலவுகளை தமிழ்ச்செல்வி ஏற்றுக்கொண்டார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய் வசந்தகுமார் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செலவு செய்தார்.” என அவர் கூறினார். முன்னால் எம்பியான வசந்தகுமாரை கே எஸ் அழகிரி இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.