தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் தொழிலதிபரான ஆண்ட்ரூ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ரமேஷ் சிங் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் சிங்கின் 2-வது மகன் ரோஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் ரோஷனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் ரோஷன் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரோஷனின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு ரோஷனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ரமேஷ் சிங் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.