கடந்த சில வருடங்களாக டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்கள் நமது தொடர்பலையை விரிவுபடுத்தி இருக்கிறது. கொரோனா ஊரடங்குக்கு பின் வேலை, கல்வி என்று அனைத்துமே சமூகஊடகங்களின் துணை இன்றி நடப்பதில்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. அதே நேரம் சமூகவலைதளங்களில் எவ்வளவு நன்மையான விஷயங்கள் உள்ளதோ, அதே அளவில் தீமையும் இருக்கிறது. சமூகஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி வருவது குறித்து அடிக்கடி செய்திகளும் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களை பயனுள்ள அடிப்படையில் கையாளுபவர்கள், அதன் வாயிலாக தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி உரிய அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரேநாளில் உலகறிந்த பிரபலமாக மாறியும் விடுகிறார்கள். அந்த அடிப்படையில் கேரள மாநிலமான கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மம்மிக்காவும் அந்த ரகத்தை சேர்ந்தவராக விளங்குகிறார். 60 வயதுள்ள இவர், லுங்கி-சட்டை அணிந்து கூலி வேலை செய்பவர் ஆவார். அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இதுநாள் வரை பரீட்சயமாக இருந்தவர். தற்போது அவர் டிப் டாப்பாக கோட்-சூட் அணிந்து உலகறிந்த பிரபலமாகி விட்டார். அவருக்கு இந்த அடையாளத்தை தனது சமூகவலைதளம் மூலமாக பெற்றுக் கொடுத்தவர் புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் ஆவார். இதுபோன்று கடந்த ஜனவரி 17ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் ஆண்டலூர் காவு திருவிழாவில் கிஸ்பு என்ற இளம் பெண் பலூன் விற்பதைக் பார்த்த புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் அவரது அலாதியான நேர்த்தியைக் கண்டு தனது கேமராவில் போட்டோ எடுத்தார்.
அந்த போட்டோவில் ஒன்றை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டார். இதற்குக் கிடைத்த வரவேற்பு எதிர்பாராதது ஆகும். அந்த போட்டோ விரைவில் வைரலாகி கிஸ்பு ஒரு போட்டோஷூட்டில் நடிப்பதற்கு வழிவகுத்தது. அவ்வாறு புகைப்படம் வைரலானதும் கிஸ்பு தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. அதன்பின் கிஸ்புவின் குடும்பத்தினர் போட்டோ ஷூட்டிற்கு சம்மதித்த பின், ஒப்பனை கலைஞர் ரம்யா பிரஜூல் அவருக்கு ஒப்பனை செய்தார். இதில் கிஸ்பு பாரம்பரிய புடவையில் தங்க நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டார். அந்த புகைப்படங்கள் அர்ஜுன் கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது.