தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனப்பகுதிக்கு உட்பட்ட திகினாரை ஜோரகாடு பகுதியில் மாதேவன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவம்மா என்ற மனைவியும், விஜயகுமார், ராஜி என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இவர் தோட்டத்திலே வீடு கட்டி குடியிருந்து வருகின்றார். இவருடைய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இவருடைய தோட்டத்திற்குள் யானை ஒன்று புகுந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதேவன் ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி கையானயை பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் யானை வனப்பகுதியை விட்டு செல்லாமல் தோட்டத்தில் அங்கும் இங்குமாக ஓடி கோபத்தில் மாதேவனை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து உதைத்து விட்டு சென்றுவிட்டது.
இதனால் சம்பவ இடத்திலேயே மாதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து ஊழியர்கள், விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மாதேவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுது துடித்தார்கள். இத்தகவலறிந்த காவல்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதேவனின் உடலை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் எல்லோரும் ஒன்று கூடி மாதேவனை உடலை எடுக்க விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தார்கள்.
இதையடுத்து பொதுமக்களிடம் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இது குறித்து நாங்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுக்கவே இல்லை. அதுமட்டுமல்லாது விவசாய நிலங்களுக்குள் யானை புகுவதை தடுக்க சுற்றி வேலி அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது எங்கள் விவசாயியை யானை மிதித்துக் கொன்று விட்டது. இதற்கு மாவட்ட வன அதிகாரி இங்கே கண்டிப்பாக வர வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளார்கள்.
இது குறித்து பொது மக்களிடம் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்கள். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து மாதேவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இடையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பாக முதல்கட்ட நிவாரணத் தொகையாக 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.