மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே சமுசிகாபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் மற்றும் சங்கரேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாணிக்கவேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கரேஸ்வரன் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் பெரம்பத்தூர் அருகில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களின் பின்னால் வந்த ஒரு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
அவர்கள் 2 பேரும் சுதாரித்துக்கொண்டு எழுவதற்குள் அவ்வழியே வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களின் மேல் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கரேஸ்வரன் மற்றும் மாணிக்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கரிவலம்நல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.