கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓடுனரான உதயா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உதயா நேற்று அரணி-வாழைப்பந்தல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் உதயாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து உதயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை பறித்து சென்றது அரணி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷை கைது செய்து அவரிடம் இருந்த 4 பவுன் தங்க நகை, மோட்டார் சைக்கிள், 2 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.