மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் கலெக்டர் அனிஷ் சேகர் வந்துள்ளார்.
மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் விழிப்புணர்வாக அரசு அலுவலர்கள் அனைவருமே புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிளில், பொதுப் போக்குவரத்து மூலம் வரவேண்டுமென்று கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று ரிசர்வ்லைனில் உள்ள தனது வீட்டிலிருந்து பாரதி உலா ரோடு, ரேஸ்கோர்ஸ், உலகத் தமிழ்ச் சங்கம், காந்தி மியூசியம் பாதையாக கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
இவருடன் உதவியாளர் சுரேஷ், டபேதார் சீனிவாசன் மற்றும் போலீஸ் பாதுகாவலர் ஆகியோர் சைக்கிளில் வந்துள்ளனர். இதன்பின் கலெக்டர் அனிஷ் சேகர் பேசியதாவது , காற்று மாசுபாட்டினால் வரும் சுகாதார தீங்கை தடுக்கும் வகையில் தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாத்திட பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
அதில் முதலமைச்சர் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தைத் தொடங்கி பிளாஸ்டிக் பையை தவிர்த்து துணிப்பையை உபயோகித்தால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளையாது என்று வலியுறுத்தி உள்ளார்கள்.அதேபோல எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை போல் மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், அரசு துறையின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன்கிழமை சைக்கிள், பொது போக்குவரத்து மற்றும் மின் சைக்கிள் மூலம் வரவேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
அதன்படி நானும் எனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தேன். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்த வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் இதற்கு முன்மாதிரியாக இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த முயற்சி எடுக்க வைக்க வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.