ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சி. அம்மாபட்டி இந்திரா காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சி. அம்மாபட்டி மற்றும் இந்திரா காலனிக்கு இடையே ரயில்வே தண்டவாள பாதை அமைந்துள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கும்,மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் இந்த தண்டவாள பாதையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று பாதை அமைத்து தருமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு மாற்று பாதை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.