மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு ஒபுளாபுரம் பகுதியில் இருக்கும் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் பேருந்தை நோக்கி கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்துவிட்டது. இதுகுறித்து பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல் இரவு நேரத்தில் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி 2 அரசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் புளியம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் 2 பேருந்துகள் மீதும் கற்களை வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இவ்வாறு அடுத்தடுத்து 3 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.