உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக 266 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதில் கோரக்பூர் பகுதியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறை உத்தரப் பிரதேச முதல்வராக தேர்வாகியுள்ளார். 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முதலமைச்சர் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக 1984, 1985, 1988 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நாராயண தத் திவாரி மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு முதல்வர் தேர்வானது இதுவே முதல் முறை ஆகும்.