தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், படைபலம், அதிகாரபலம் வெற்றி பெற்றிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரி மூலம் முறைகேட்டினை அரங்கேற்றிய திமுகவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஆளுகிறவர்களைப் பார்த்து மக்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகளே அஞ்சக்கூடிய துர்ப்பாக்கிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.