உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு கடும் சேதமடைந்துள்ளது. இதற்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, மருத்துவமனை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள். இது அக்கிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இது காட்டுமிராண்டி தனம் என்றும் சீரழிவு என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஐ.நாவின் பொது செயலாளரான ஆன்டனியோ கட்டரெஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் பயங்கரம்.
இந்த போரில் சம்பந்தப்படாத மக்கள் தான் இதற்காக அதிகமான விலை கொடுக்கிறார்கள். உணர்வுகளின்றி நடத்தப்படும் இந்த வன்முறையை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இந்த படுகொலைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.