மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி மூதாட்டி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் மதியழகன் சுசிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுசீலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான ராஜாங்கம் என்பவர் மூலமாக பருவாச்சி கிராமத்தில் இருக்கும் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டு மனையை கடந்த-2013 ஆம் ஆண்டு வாங்கினேன். சில மாதங்களுக்கு பிறகு வீடுகட்டும் நோக்கத்தில் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுற்றுசுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்தபோது கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாங்கம் எனது நிலத்தை மற்றொருவருக்கு கிரையம் செய்து கொடுத்தது தெரிந்தது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அழைத்தேன். அதன்பேரில் ராஜாங்கம், பத்திரத்தை தயார் செய்த பத்திர எழுத்தர், துணை பதிவாளர் ஆகியோரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜாங்கம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 மாதங்கள் ஆகியும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ராஜாங்கத்தை கைது செய்து எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுசீலா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.