உத்திரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜக முன்னிலையில் உள்ளதாக ஆரம்பகட்ட நிலவரம் வெளியானது. அதிலும் குறிப்பாக ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 3 இடங்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹத்ரஸ், உன்னாவ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது லக்கிம்பூர் கேரியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கொடூரமாக கார் மோதிய படுகொலை சம்பவமும் அரங்கேறியது.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இதனால் பாஜக லக்கிம்பூர் கேரியில் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லக்கிம்பூர் கேரி, ஹத்ராஸ், உன்னாவ் உள்ளிட்ட 3 இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பது எதிர்கட்சி தரப்பினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.