சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா(49). இவர் உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இதனிடையே, இவர் குழந்தைகளின் ஆபாச படத்தின் இணையதள இணைப்பை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துவந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் சுமித் குமாரை தேடிவந்தனர்.
இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த சுமித் குமாரை தனிப்படை காவல் துறையினர் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்தனர். பின்னர் அவரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், சுமித் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் ஆகியோரை கண்காணித்து கொண்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், மற்றுமொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.