மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும், மக்கள் செய்தி மய்யம் ஆசிரியருமான அன்பழகன் சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் அரங்கு 101இல் அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய ஆவண புத்தகம் ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்து இன்று (12.01.2020) காலை கைது செய்துள்ளனர்.
அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் செய்கின்ற ஊழல்களையும், தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களையும் முடக்குவதற்காக தொடர்ந்து காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது அரசு என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம் சார்பாக, உடனடியாக எந்தவித நிர்பந்தமுமின்றி பத்திரிகையாளர் அன்பழகனை விடுதலை செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் மூலம் மிரட்டுவதால் உண்மையை முடக்கிவிடலாம், ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கவனத்திற்கு போக விடாமல் தடுத்து விடலாம் என்று நினைப்பது ’சூரியனை உள்ளங்கைக்குள் மறைக்க நினைக்கும் அறிவீனம்’ என்பதை உணர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.