மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்று குட்டிகள் உயிரிழந்தது. இந்நிலையில் ராதாபுரம் கிராமத்தில் வசிக்கும் மதர்ஷா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டிகளை கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை வந்து பார்த்த போது அதில் ஒரு கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் 2 கன்று குட்டிகள் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து இவரது பக்கத்து நிலத்துக்காரரான காதர் அலி என்பவருக்கு சொந்தமான ஒரு கன்று குட்டியையும் மர்ம விலங்கு கடித்து பலத்த காயமடைந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர் லட்சுமி பிரியா, வனத்துறையினர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்றுக் குட்டியின் கடித்த இடத்தில் இருந்து எச்சங்களை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்குவதோடு வனத்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கன்று குட்டிகளை கடிப்பது எந்த மர்மவிலங்கு என கண்டுபிடிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.