புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த்தும் குரல் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள பஜார் பகுதியில் தனது நண்பரின் தனியார் வாட்ச் கடையில் தனது நேரத்தை கழித்துவரும் ரங்கசாமியிடம் ஒரு தனியார் பள்ளி மாணவி தனது செல்போனில் திடீரென அவரிடம் பேட்டி கேட்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அந்த மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.
அப்போது இருவரின் உரையாடலுக்கிடையே உலகத்திலேயே உங்களுக்கு பிடித்த நபர் யார் என்ற மாணவியின் கேள்விக்கு, தனது அம்மா என்றும் பளீச்சென்று ரங்கசாமி பதிலளித்துள்ளார். சூப்பர் பவர் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, இன்னும் மக்களுக்கு அதிக நல்லது செய்வேன் எனக் கூறினார். உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் எப்படி நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, அமைதியாக இருந்து விடுவேன் என்று முன்னாள் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.