Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலைக் கழக மாணவி தற்கொலை- காரணம் என்ன?

பெரியார் பல்கலைக் கழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம் . இங்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதா (வயது 23) தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிவேதா தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள்  பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

சம்பவஇடத்திற்கு வந்த ஆய்வாளர் செந்தில் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அங்கப்பன் தலைமை காவலர்கள் நிவேதா தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிறகு நிவேதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால்  மாணவிகளும், மாணவர்களும் திடீரென நள்ளிரவில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் செந்தில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

மாணவி நிவேதா தங்கியிருந்த அறை முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மாணவி பயன்படுத்திய  டைரி கைப்பற்றினர். இதுதவிர மாணவியின் அறையில் 3 பக்க கடிதம் ஒன்றும் சிக்கியது. இதையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் நிவேதாவை காதலிக்கவில்லை என தெரிகிறது. இந்த ஒருதலை காதலால் நிவேதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மாணவி நிவேதா தற்கொலையால் பெரியார் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த  மாணவிகளுக்கு இன்று காலை திடீரென விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் கல்லூரிக்கு எப்போது வரவேண்டும் என தகவல் தெரிவிக்கிறோம். பின்னர் கல்லூரிக்கு வாருங்கள் என மாணவிகளிடம் தங்கும் விடுதி கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்து அனைவரையும் வீட்டுக்கு செல்ல உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

இங்கு கடந்த வாரம் பேராசிரியர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் லிப்டில் செல்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி, தான் அணிந்திருந்த அடையாள அட்டையை பேராசிரியர் மீது வீசி சென்று இருந்தார். பின்னர் இவர்களை பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சமாதானம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |