காதல் திருமணம் செய்துகொண்ட பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(21). இவர் தனது உறவினரான பார்த்திபன்(25) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
பார்த்திபன் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாகவே மாலதி மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாலதி காலியண்ணபுதூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டபோது மாலதியின் வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.
அதில் நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு நானே பண்ணிக்கிட்ட பரிகாரம். இதுவரை நான் எடுத்த முடிவுகள் அனைத்துமே சரியாகத்தான் இருந்தது. என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம். எனது கணவருக்கு தோஷம் இருப்பதாகவும் அவரை கல்யாணம் செய்ய வேண்டாம் என பலரும் கூறினர். அதையும் மீறி நான் போராடி காதலரைக் கரம் பிடித்தேன். அந்த தோஷத்தால் எனது கணவர் தினம் தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் என் கணவன் உயிரை காப்பாற்றுவதற்காக என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.
இதெல்லாம் நல்லா யோசித்து எடுத்த முடிவு தான் இதுக்கு யாரும் காரணமில்லை. வாழும் போது யாருக்கும் உதவியாக இருக்க வில்லை சாகும்போது உதவியாய் இருக்க விரும்புகிறேன். அதனால் என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுத்து விடுங்கள். நான் எடுத்த இந்த முடிவு யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என அதில் கூறியிருந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.