செல்போனை எடுத்து பேசாததால் நண்பனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே கரீம்சாதக்காவில் சையத் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முகமது இப்ராகிம் அவசர தேவைக்காக சையது உசேனை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சையத் உசேன் அந்த அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முகமது இப்ராஹிம் சையது உசேனின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சையது உசேனின் மனைவி அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தியாகதுருகம் காவல்நிலையத்தில் சையது உசேனின் மனைவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது இப்ராஹிமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.