சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 43). இவர் சுதர்சன் நகரில் சொந்தமாக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் வாட்டர் சர்வீசை வாகனத்திற்கு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்து பார்த்த போது, வரதராஜன் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனை அடுத்து மயக்கமடைந்த வரதராஜனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்து சேலையூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.