அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விருப்பபட்டால் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள் என்று கூறினார். மேலும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார். பாஜக- காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் கூடுவதற்கான முன்முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.