ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்ய நாட்டில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் பொருளாதாரம் வரும் வருடங்களில் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.
எனவே, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்யவில்லை எனில் மேற்கத்திய நாடுகள் பாதிப்படையும், விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்ற பயம் ஏற்பட்டது. மேலும் சமீப நாட்களில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உயர்ந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள், கச்சா எண்ணெய்க்கான தேவையை பூர்த்தி செய்வதாக அறிவித்திருக்கின்றன. இதனால் அந்த பிரச்சனை தீர்ந்தது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்திருப்பது, உலகளாவிய உணவு பொருட்களுக்கான விலையை அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ரஷ்ய அரசு தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னர்கள், டர்பைன்கள், கட்டிட எந்திரங்கள், வீடியோ டிஸ்ப்ளே, உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், ப்ரொஜெக்டர், கன்சோல், ஸ்விட்போர்டு, மருத்துவ உபகரணங்கள், ரயில் எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், உணவுப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், எந்திரங்கள், மின்னணு பொருட்கள், கார்கள், உதிரிபாகங்கள் என்று 200 வகையான பொருட்கள் இந்த வருடம் தடை செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறது.