காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வு பெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 32 வருடங்களாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்வது மற்றும் காவல்துறையினருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதன்பின் மூதாட்டி கலைவாணி உலக பெண்கள் தினம் அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பின்னர் அவரது பணியை சிறப்பிக்கும் விதமாக காவல்துறையினர் மூதாட்டிக்கு திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தி உள்ளனர். அப்போது கலைவாணிக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் கொடுத்ததுடன், இன்ஸ்பெக்டர் தனது காவல்துறை வாகனத்திலேயே அவரது வீட்டுக்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக மூதாட்டி கலைவாணி கூறியதாவது, எனது கணவர் ராமகிருஷ்ணன். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். எங்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். பின்னர் கணவன் மற்றும் குழந்தைகள் 3 பேரும் சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டனர். ஆதலால் 170 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். மேலும் 900 ரூபாயாக சம்பள உயர்வு பெற்று, தற்போது 7,000 ரூபாய் வரை வாங்கி வந்தேன் என கூறியுள்ளார்.