ஆம்னி காரில் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலையிலிருந்து-தாராபுரம் நோக்கி வந்த ஆம்னி காரை காவல்துறையினர் நிறுத்த முயன்றனர்.
ஆனால் ஆம்னி கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். அதன்பின் ஆம்னி காரில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் சுமார் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆம்னி கார் டிரைவரிடம் விசாரித்த போது அவர் உடுமலை பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 140 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.