பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலரும் கலந்துகொண்டு பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இதுவரை பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்க முடியாமல் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் பால் வாங்கி வருகின்றன. அவர்களுக்கு பல மாதங்களாக உதவித்தொகை வழங்காமல் உள்ளனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதால், அந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாவின் நிறுவனங்களில் தேக்கம் அடைந்துள்ள பால் பவுடர் போன்றவற்றை ரேஷன் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.