பெண்ணிடம் 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே அனுகோடு பூவன்விலை பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையை கவனித்துக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கீழே இறங்கி வாழைப்பழம் தருமாறு ரோஸ்மேரியிடம் கேட்டுள்ளார்.
அதன்பிறகு ரோஸ்மேரி வாழைப்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் எதிர்பார்க்காத நேரத்தில் ரோஸ்மேரியின் கழுத்தில் இருந்த 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரோஸ்மேரி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.