திருவள்ளூர், சேலம் மற்றும் துாத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 4,320 மெகா வாட்திறனில் 5 அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன. அதில் முழு மின்உற்பத்திக்கு தினசரி பயன்படுத்துவதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரியானது மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து அனுப்பப்படுகிறது. இதனிடையில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களில் கடந்த 2021 இறுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி பாதித்ததால் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் அனல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டு அனல் மின்நிலையங்களில் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் மின் தேவை சரிவடைந்ததால் நிலக்கரி பயன்பாடும் குறைந்து விட்டது. இதன் காரணமாக நிலக்கரியை மிச்சப்படுத்தி தேவைக்கு ஏற்றவாறு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது வெயில் சுட்டெரித்து வருவதால் மின்தேவை 15 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டி உள்ளது. அதனை பூர்த்தி செய்ய அனல் மின் நிலையங்களில் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக 3 தினங்களாக மேட்டூர் மின்நிலையத்தில் 210 மெகா வாட் திறனுடைய இரு அலகுகளிலும், துாத்துக்குடி மின்நிலையத்தில் 210 மெகா வாட் திறனுடைய 1 அலகிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனல் மின்நிலையங்களில் 7 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்க வேண்டும். இதை தவிர துறைமுகங்களிலும் இருப்பு வைக்கப்படும். ஆனால் நேற்றைய நிலவரத்தின்படி அனல் மின்நிலையங்களில் 1 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருக்கிறது. அதனை பயன்படுத்தி ஒன்றரை நாட்களுக்கு தான் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு தட்டுப்பாடு காரணமாக மின்உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனல் மின்நிலையத்தின் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். அதாவது ஒடிசாவிலிருந்து தினசரி 30 ஆயிரம் டன் நிலக்கரி தான் வருகிறது. இதன்காரணமாக 3,000 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2,200 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 2 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்கும் அடிப்படையில் கப்பல்களில் நிலக்கரி வருகிறது என்று அவர் கூறினார்.