தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இதனைக் கண்காணிப்பதற்காக 50மாவட்டம் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இவற்றில் சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளானது கடந்த பல வருடங்களாக வரையறை செய்யப்படாமலே இருக்கிறது. அதிலும் குறிப்பாக வருவாய் துறையின் வட்டம் எனப்படும் தாலுகா எல்லைகளும், சார் பதிவக எல்லைகளும் முரண்படுகின்றன. இதன் காரணமாக ஒரு சார்பதிவக எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட தாலுகாக்கள் உள்ள நிலை இருக்கிறது. இதனால் பட்டா மாறுதல் பணிகளில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வருகிற அனைத்து கிராமங்களும் ஒரே தாலுகாவை சேர்ந்ததாக உள்ளதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
இதற்காக சார் பதிவக எல்லைகளை மறு சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு சார்-பதிவாளரும் தங்கள் எல்லைக்குள் வரும் அனைத்து கிராமங்கள், அவை சார்ந்துள்ள தாலுகா, மாவட்ட விபரங்களை அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவரங்கள் கிடைத்ததும் ஒரு தாலுகாவிற்கு 1 சார்பதிவாளர் அலுவலகம் எனும் நிலை ஏற்படும் என்றும் இதற்காக தேவையான இடங்களில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பதிவு மாவட்டங்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார். ஆகவே அடுத்த ஒருசில மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர்.