மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரவிளை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் சில வாலிபர்கள் அடிக்கடி ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இந்த வாலிபர்களை பிடித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபர்களின் பெற்றோர்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபடும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.