புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் வாயிலாக அரசு வழங்கி வருகிறது. இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதால், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. குறிப்பாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு அதன் முலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் கைரேகை பதிவை வைத்து உணவு பொருட்களை பெற முடியும். இதனால் அந்தந்த அட்டைதாரர்களுக்கு மட்டுமே அவர்களுக்குரிய உணவு பொருட்கள் கிடைக்கிறது.
இந்நிலையில் தற்போது இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருப்பதால் அவர்க்குக்குரிய ரேஷன் பொருட்களும் சேர்த்து வழங்கப்படுகிறது. இது தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் கூறியதாவது, குடிமைப்பொருள் வழங்கல் துறையால் பெறப்பட்ட ரேஷன் கார்டில் யாராவது இறந்திருந்தால் அவர்களின் விபரங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்தவரின் பெயரை உடனே ரேஷன் கார்டில் இருந்து நீக்கவேண்டும்.
அவ்வாறு நீக்கவில்லையெனில் அவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் இறந்தவரின் பெயரை நீக்கம் செய்ய dcsca.py.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் பெயரை நீக்க இது குறித்த ஆவணங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் அதிகாரிகளால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். ஆகவே பெயரை நீக்கமால் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் கூறியுள்ளார்.