கேரளாவிற்கு கடந்த முயன்ற 123 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 21), அன்பு(25), சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணி (21), ரஞ்சித் (26) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையில் 123 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை கேரளாவிற்கு கடந்த முயன்ற 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.