பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் எமிஸ் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எமிஸ் எனப்படும் பதிவு முறையால் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆசிரியர் தொழில் என்பது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அற்புதமான தொழில். என் கடமை பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்தின் அடிப்படையில் எதிர்கால குடிமக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் தன்னலமற்ற பணியும் மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.
இப்படி இன்றியமையாத தன்மை வாய்ந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் வேலைப்பழு காரணமாக கல்வி போதிக்க முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் ஆணுக்குப் பெண் இளைத்தவர் இல்லை என்பதற்கு ஏற்ப கல்வியில் பீடு நடை போட்டு வரும் பெண் குழந்தைகள் தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. எமிஸ் எனப்படும் பதிவு முறை அமைப்பு அறியபட்டதாகவும் இதில் மாணவ மாணவியரின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் வலைப்பதிவும் இதன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது மாணவ மாணவிகள் வருகைதர இணையம் மூலம் மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்த உத்தரவின் காரணமாக ஆசிரியர்கள் முக்கியமான கல்விப் பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவ, மாணவியரின் வருகைப் பதிவை பதிவு செய்ய பாதி நாள் போய் விடுகிறது. மீதி இருக்கிற நாளை என்ன செய்ய முடியும் என ஆசிரியர்கள் செய்வதரியாது திகைத்து வருவதாகவும் பத்திரிகைகளில் தகவல்கள் வந்துள்ளது. கல்விப் பணியை தவிர பிற பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்களுக்கு செய்வதற்கு நேரம் இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் எனவும் இது தொடர்பான பணியை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த விவரங்களை தங்கள் தாயுடன் மருத்துவரிடமோ சொல்வார்களே தவிர ஆசிரியர்களிடம் சொல்ல தயங்குவார்கள் இது போல ஆண் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளிடம் விவரங்களை கேட்பது என்பதோ அல்லது அவர்களிடம் பெண் குழந்தைகள் சொல்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இந்த விபரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை எனவும் சக மாணவிகளை இது போன்ற விபரங்களை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள் இந்த உத்தரவு மாணவர்களையும், பெற்றோரையும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.
எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு தொடர்புடையவரை அழைத்து பேசி பெண் குழந்தைகள் இயற்கை சார்ந்த விவரங்களை கேட்கப்படுவதை தவிர்க்கவும் மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் கூடுதல் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.