சட்டவிரோதமாக ஆலையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அரிசியை பதுக்கி வைத்த சங்கர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆலையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் சங்கர் ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்கள் வாங்கும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.