தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சுனாபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையை வைத்து மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தன்னைப்பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் முருகன் மாரியப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த சிங்கராஜ் என்பவருக்கும் முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.