சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதன்படி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று காலை சபரிமலை சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்ட அம்சத்தை மட்டுமே விசாரிக்கவுள்ளோம்.
மதவழிபாட்டு தலங்களில் அதாவது கோயில் மற்றும் மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறுவது குறித்த விவகாரத்தை விசாரிப்போம். இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனை விசாரிக்கப்போவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.