சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவை சேர்ந்த தம்பதியர்கள் அப்துல் ரகுமான்(37) யாஸ்மின்(27). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த மார்ச் 10ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும் யாஸ்மின் தூக்கத்திலிருந்து எழாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவமனையை கொண்டு சென்று பார்த்துள்ளார். மருத்துவரோ அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாஸ்மினின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குடும்ப தகராறு காரணமாக யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்துல் ரகுமான் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் யாஸ்மின் கணவரான அப்துல் ரகுமானை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது யாஸ்மின் அப்துல் ரகுமானின் தம்பியுடன் பல மாதங்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அந்த தொடர்பை துண்டிக்குமாறு அப்துல் ரகுமான் பலதடவை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் இருவீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசிய நிலையில் யாஸ்மின் மீண்டும் அவர் தம்பியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் யாஸ்மின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியது வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.