கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது நண்பர் சுதீர் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிச்சிப்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுதிர் தனது வீட்டில் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான 3 பெண்கள் என 4 பேருடன் காரில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கார் கல்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த சுதிர் உள்பட 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.