பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கைதிகள் கரும்பை பயிரிட்டனர். அது தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகளாக தேர்வு செய்யப்பட்ட 100 லிருந்து 150 பேர் அங்கு உள்ள சுமார் 25 ஏக்கரில் விவசாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த விளை நிலத்தில் நெல் கரும்பு வாழை மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படும்.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைதிகள் சில மாதங்களுக்கு முன் கரும்பு பயிரிட்டு அது தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.இந்த கரும்புகளை அறுவடை செய்யும் பணியை பாளையங்கோட்டை சிறைத்துறை டிஐஜி தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நன்னடத்தை கைதிகளை விவசாய பணிகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பயிர்களை சிறை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளவற்றை சிறை சாலை அருகில் உள்ள அங்காடியில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விற்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு விளைவிக்கப்பட்ட கரும்பானது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கைதிக்கு ஒரு கரும்பு என வழங்கப்பட்டது போக, மீதம் உள்ளவை சிறைச்சாலையின் அருகே உள்ள அங்காடியில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.