காவல்துறையினரிடம் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் முருகவேல் என்ற பைனான்ஸ் ராஜா வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் முருகவேல் மீது இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் முருகவேலை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து முருகேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கடலூருக்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.
இந்தப் பேருந்து கள்ளக்குறிச்சிக்கு அருகில் சென்றபோது முருகேசன் திடீரென பஸ்சில் இருந்து கீழே குதித்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் முருகேசன் வேகமாக ஓடி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.