சாக்கடையில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 8-வது குறுக்கு தெருவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சினை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டது. இந்நிலையில் அதிக அளவில் சேறு இருந்ததால் சாக்கடையிலிருந்து மாடு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மாடு நிற்கும் இடத்தை அறிந்து அதற்கு நேராக இருக்கும் சிமெண்ட் பலகைகளை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாட்டின் மீது கயிறு கட்டி அதனை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து உரிமையாளரான அன்பழகன் என்பவரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது.