Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் தரும் சாம்பியன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதைத்தொடர்ந்து, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நட்சத்திர ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான இவர், 2016இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 தொடரில்தான் இறுதியாக விளையாடினார்.

அதன்பின் 2018இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதனிடையே, பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“டி20 போட்டிகளின் இறுதிகட்ட ஓவர்களில் பிராவோவின் பந்துவீச்சு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அவரது சாதனைகளே பேசும். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதால், அந்த நோக்கத்துடனே அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தேவையான இடங்களில் தனது அனுபவத்தின் மூலம் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும் இருப்பார்” என வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்பர் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: பொல்லார்டு (கேப்டன்), டுவைன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரான் ஹெட்மயர், பிரன்டன் கிங், எவின் லூயிஸ், கெரி பியரி, நிக்கோலஸ் பூரான், ரோவ்மன் போவல், ஷேர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, லென்டல் சிம்மன்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

Categories

Tech |