பிரதமர் மோடிக்கு உக்ரேனிய பெண் ஒருவர், டெல்லியில் உள்ள தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண், இந்தியாவில் உள்ள நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ளதாகவும், ஆனால் அந்த பெண்ணை ரஷ்ய போரால் உறைந்து போயிருக்கும் உக்ரைனில் அவரது கணவர் விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்தப் பெண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில் உக்ரைனின் அண்டை நாடான போலாந்து வார்சா நகரில் இருக்கும் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் அந்த பெண்மணி இந்திய பிரதமர் மோடியிடம், இந்தியாவுக்கு தன்னை மீட்டுக் கொண்டுவந்து தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதனை அடுத்து அகதிகள் முகாமில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மூலம், அப்பெண்மணி இந்த விஷயத்தை தற்போது தெரிவித்திருக்கிறார். இவ்வாறு உக்ரைன்-ரஷ்யா போரால் தவித்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்த இந்திய அரசு, தற்போது தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மருமகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்பதாக செய்தியாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.