ரேஷன் கார்டு வாங்குவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்பதைக் காண்போம்.
ரேஷன் கார்டு என்பது அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். தேசியஉணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதே இதன் அடிப்படையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் அட்டைகள் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்கு தகுதிகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அனைவருக்கும் கிடைத்து விடாது. முதலாவதாக விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவரின் குடும்பத்தினரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்ப அடைத்து வைத்திருக்க கூடாது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள வேறு எந்த குடும்ப அட்டையிலும் தங்கள் பெயரை உறுப்பினராக பதிவு செய்திருக்க கூடாது. ஆவணங்களை பொறுத்தவரையில் கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானதாகும்.
1. விண்ணப்பதாரரின் வசிப்பிடச் சான்று (தமிழகத்தில்)
2. வாக்காளர் அடையாள அட்டை (EPIC)
3. சொந்த வீட்டுக்கு சொத்து வரி செலுத்திய ரசீது
4. மின் கட்டண ரசீது (கடந்த மாதம்)
5. தொலைபேசி கட்டண பில் (கடந்த மாதம்)
6. வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம்
7. குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கான ஒதுக்கீடு ஆணை
8. பாஸ்போர்ட்
9. வாடகை ஒப்பந்தம் (வாடகை வீட்டில் இருந்தால்)
ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு ஆதார் கார்டு மற்றும் சிலிண்டர் பில்கள் கேட்கிறார்கள்.
விண்ணப்பதாரரின் அப்பா வீட்டில் இதற்கு முன்னர் இருக்கும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இ-சேவை மையங்களிலேயே ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.