சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு சென்றது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் பரவலாய் ஏற்படும் மரணங்கள் பூஜ்ஜியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் அண்டை மாநிலங்களில் வைரஸ் தொற்று குறையாத காரணத்தினால் மக்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இனி நோய் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்ற போதிலும் முகக் கவசம் அணிவதை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும். நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட வலுவான மசோதாவை யாராலும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. தேசிய நலவாழ்வு குழுமத்தில் உள்ள 663 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திமுக ஆட்சியில் இருந்தபோது அண்ணாநகரில் அண்ணா அரங்கம் கட்ட ஏற்பாடுகள் செய்து 90% பணியை நிறைவு செய்த பிறகு அதிமுக அதில் எஞ்சியிருந்த பணிகளை செய்து முடித்து பெயர் வைத்துக் கொண்டது. உன் குழந்தைக்கு தான் உங்களால் பெயரிட முடியும் பக்கத்து வீட்டுகாரன் குழந்தைகளும் நீ பெயரிட கூடாது.” எனக் கூறினார்.