10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் உதயகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உதயகுமாரிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எனவே திருவண்ணாமலையில் இருக்கும் தனது அண்ணன் சந்திரன் வந்தவுடன் தம்பிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென உதயகுமாரி ஆசையாக இருந்துள்ளார். இந்நிலையில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றபிறகு பிறந்தநாள் புத்தாடை அணிந்து கொண்டு தனது அண்ணன் வருகைக்காக உதயகுமாரி நீண்ட நேரமாக காத்து கொண்டிருந்தார்.
ஆனால் மாலை வரை சந்திரன் வராததால் மன உளைச்சலில் இருந்த உதயகுமாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.