வணிக வளாகங்களில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் இந்திய வர்த்தக தொழில் குழும கூட்ட அரங்கில் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் தலைவர் சலிம்முதின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மருந்து வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறியதாவது, நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன. இரவு நேரங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு வாகனங்கள் நிற்காமல் செல்கின்றன. மற்றும் கடைகளை பூட்டி விட்டு சென்ற பிறகு பொருட்களை திருடி செல்கின்றனர்.
இதனால் இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்கு கண்காணிப்பு கேமரா இருப்பது நல்லது. மேலும் கேமராக்கள் மூலம் மனிதர்கள் தங்கள் வணிக நிறுவனத்தை எங்கிருந்தாலும் கவனித்துக் கொள்ளலாம். எனவே அனைவரும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் முடிவில் டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.